தற்போது பலரது கைகளிலும் மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. ஆனால், ஆங்கிலம் அறியாதவர்கள் அவற்றில் இருக்கும் பல காரியங்களை அறிந்துப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. அதை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
உங்கள் வீட்டிலோ அருகிலோ ஆங்கிலம் தெரிந்த யாரிடமாவது கொடுத்து இதை மட்டும் செய்யுங்கள். பிறகு அனைத்தையும் உங்கள் மொழியிலேயே நீங்கள் படிக்க இயலும்.
உங்கள் மொபைல் மற்றும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஆப்ஸில் Settings->Language->தமிழ் என்பதைத் தேர்வுசெய்யுங்கள். தற்போது உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பெருவாரியான பணப்பரிமாற்ற ஆப்ஸ், உணவு ஆர்டர் செய்யும் ஆப்ஸ், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல தமிழ் மொழியில் கிடைக்கின்றன. ஆங்காங்க சில சிக்கல்களும் தவறான மொழிபெயர்ப்புகளும் இருந்தாலும் நாளுக்கு நாள் அவை முன்னேற்றம் கண்டு வருகின்றன. சில பெருநிறுவனங்கள் ’இயந்திர’ கற்றல் என்னும் மெஷின் லெர்னிங் மூலமாக மனிதர்களின் கட்டுரைகளையும், கமெண்ட்களையும் படித்து, எவ்வாறு ஒரு மொழியில் அவர்கள் விரும்பும்வண்ணம் எழுதலாம் என்பதையும் கற்றுக்கொண்டு வருகின்றன. இதனால் வேலைவாய்ப்பை இழக்கும் மொழிபெயர்ப்பாளர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. ஏனென்றால், தற்போது சில இயந்திர மொழிபெயர்ப்புகள் ஆரம்பநிலை மனித மொழிபெயர்ப்பாளரைவிட சிறப்பாக மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டன. தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கற்கிறவர்களால் மட்டுமே அத்துறையில் இனி வெற்றிபெற இயலும். மேலும் தமிழில் ஒரு ஆப்ஸைப் பயன்படுத்தும் போது ஏற்படும் மோசமான அனுபவங்களையும் புகாரளிப்பதன் மூலம் அவற்றின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த நீங்கள் உதவ முடியும்.