தமிழ் மொழி உலகெங்கிலும் சுமார் 5 நாடுகளில் அதிகாரபூர்வ மொழியாக இருக்கிறது. இருந்தபோதிலும், தமிழை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இந்தி மொழியைத் திணிப்பதில் அவ்வப்போது இந்திய அரசாங்கம் வேலைசெய்து வருவதை நாம் அறிவோம்.
பல இடங்களில் வங்கிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகின்றது. ரயில் நிலையங்களில் இந்தியில் மட்டும் பலகைகள் வைக்கப்படும் சூழல்களையும் பார்த்தோம். விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தமிழ் அறியாத மக்களைப் பணியமர்த்தியதைப் பார்த்தோம். இன்னும் தொடர்ந்து இது போன்ற பல சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன.
அப்படியானால் நம் தமிழ் மொழியைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்து இருப்பதற்கும், அடுத்த சந்ததியருக்கும் தமிழ் மொழி கிடைக்கச் செய்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கம் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது தங்கள் இணையதளங்கள், செயலிகள் மற்றும் பிற மென்பொருட்களைத் தமிழில் வெளியிட்டு வருகின்றன. அவற்றை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பதன் அடிப்படையிலேயே அவை தொடர்ந்து தமிழாக்கம் செய்வதற்கான ஊக்கம் அந்தந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும்.
உதாரணத்திற்கு Gpay, PhonePe, YouTube, நீங்கள் பயன்படுத்தும் ஆண்டிராய்டு மொபைல், ATM உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் பயன்படுத்துவேன் என்று உறுதிகொள்ளுங்கள்.
அந்த இணையதளங்களிலும் மென்பொருட்களிலும் இருக்கும் தமிழ் உங்களுக்குப் புரிகிறதா இல்லையா? ஏதேனும் உங்களுக்குச் சிரமமாக உள்ளதா? என்பவற்றை எல்லாம் குறித்து தொடர்ந்து அந்தந்தத் தளங்களில் கருத்து தெரிவியுங்கள். இது அந்தந்தச் செயலிகளையும் மென்பொருட்களையும் தமிழ் மொழி மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்கும்.









No comments:
Post a Comment