இக்காலத்தில் இதயம் சொல்வதைப் பின்பற்றுதல் குறித்து அதிகமானோர் சிந்திக்கத் தொடங்கிவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்த வேலையைச் செய்துகொண்டு வாழ்நாளைக் கழிப்பதே மனிதராய் பிறந்தவருக்கான கடமையாக இருந்துவந்தது. ஆனால், இப்போது தன் இதயத்தின் உணர்வுகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் பலரிடம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதை எப்படிச் செய்வது என்பது குறித்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.
நான் பல்வேறு துறைகளில் பணிசெய்துவிட்டு இறுதியாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கணிப்பொறி சார்ந்த ஒரு வேலையில் இருக்கிறேன். ஓய்வுநேரத்தில் டிவியில் தோனி கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர் சிக்சர் அடித்து முடிப்பதும், சாதுரியமான விக்கட் கீப்பிங் மூலம் பலரை அவுட் செய்வதும், பந்துவீச்சாளர்களைத் திறமையாகக் கையாண்டு வெற்றிக் கோப்பையைத் தட்டிச் செல்வதையும் பார்க்கிறேன். அரங்கம் நிறைந்த கரகோஷம், ஏராளமான விளம்பரங்களில் தோனி காட்சியளிக்கிறார். சிறுவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தோனியைப் போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இதன் மூலம் எனக்குள் கிரிக்கெட் வீரராக மாறவேண்டும் என்கிற ஒரு ஆசை உருவாகின்றது. அப்படியானால் நான் என்ன செய்யவேண்டும். உடனடியாக என் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னைக்குப் பிரயாணம் செய்து கிரிக்கெட் மைதானத்தில் ஏதாவது ஒரு கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டுமா?
நிச்சயம் நான் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனென்றால், என் வயது 35, தற்போதுள்ள வேலைக்கு வருவதற்காக என் வாழ்க்கையில் பல வருடங்களை முதலீடு செய்து இருக்கிறேன். இரண்டாவதாக, புதிதாக வேறொரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் அதே அளவிலான காலத்தை முதலீடு செய்ய வேண்டும். காலத்தை முதலீடுசெய்யும்போடுஹ் என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள போதிய வருமானம் வேண்டும். சரி, அப்படியே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று மட்டையைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது ஏதோ ஒரு இளையராஜா பாடல் காதில் வந்து விழ, பாடகராகவேண்டும் என்கிற ஆசை எழுந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது இசைஞானி ஆகவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டால் என்ன செய்வது?
என்னைப் பொருத்தவரை கிரிக்கெட் விளையாட ஆசை ஏற்பட்டால் பக்கத்து மைதானத்திற்குச் சென்று சிறுவர்களிடம் ஒரு ஓவர் கேட்டு விளையாடுவேன். பாட்டுப்பாட ஆசை வந்தால் ஸ்ம்யூல் போன்ற ஆப்ஸில் பாடுவேன், அல்லது குளியலறையில் குளிக்கும்போது பாடுவேன். இசை வாசிக்க ஆசை ஏற்பட்டால், 1 வருடமாவது தினமும் மாலை நேரத்தில் யாராவது ஒரு இசை வாத்திய ஆசிரியரிடம் சென்று வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்வேன். அதுவே சிறந்ததாக இருக்கும்.
உங்களுக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்தில் தீராத பற்று இருக்குமானால், அதை அடைவதற்கான பின்னணி பண முதலீடு, நேர முதலீடு ஆகியவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், பொழுதுபோக்காக அவற்றை நீங்கள் வைத்துக்கொண்டு, உங்களுக்கு உணவளிக்கும் தொழிலைத் தொடரவேண்டும்!
சிலர் சிறுவயதுமுதலே மருத்துவத் தொழிலுக்குச் செல்ல வேண்டும், அல்லது விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைத்து வளர்வது உண்டு. அந்த ஆசை முதலில் எவ்வாறு உருவானது? சேவை செய்ய வேண்டும் என்பதற்கா அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கா? இரண்டில் எதுவாக இருந்தாலும் அப்படி ஒரு தொழில் செய்ய முடியாது என்கிற நிலை வரும்போது இரண்டு முடிவுகளில் ஒன்றைச் செய்யலாம்
1. தடைகளை உடைத்து அந்தத் தொழிலுக்குள் நுழைதல்
2. அதே போன்று சேஐ செய்ய அல்லது பணத்தைச் சம்பாதிக்க வேறு வாய்ப்புகளைக் கண்ட
றிதல்.
மகிழ்ச்சியாக வாழத்தானே ஆசை, இலட்சியம் போன்றவற்றை எல்லாம் உருவாக்கிக்கொண்டோம். அந்த ஆசை நிறைவேறாதபோது ஒன்று தொடர்ந்து மேலும் கடினமாக அதற்கான உழைப்பச் செலுத்த வேண்டும், இல்லையேல் அதே நோக்கத்தை வேறு தொழில்கொண்டு செய்ய வேண்டும். ஆனால், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் அந்த இலட்சியத்தை உருவாக்கியதன் நோக்கத்தையே மாற்றிவிடுகிறார்கள் மாணவச் செல்வங்கள். இவர்களுடைய தற்கொலையினால் வேறு யாராவது பயனடைவார்களா என்று தெரியாது, ஆனால் இலட்சியம் நிறைவேறாவிட்டால் தற்கொலை தான் செய்யவேண்டும் என்று பல மாணவர்களும் தூண்டப்படுகிறார்கள் என்பது நம் கண்முன்னே நிகழும் கொடூரம்.
No comments:
Post a Comment